சனி, 4 ஆகஸ்ட், 2012

தஞ்சாவூர் வீணை, நாச்சியார்கோவில் விளக்கு, பத்தமடை பாய்க்கு புவிசார் அந்தஸ்து

தஞ்சாவூர் வீணை, நாச்சியார்கோவில் விளக்கு, பத்தமடை பாய்க்கு புவிசார் அந்தஸ்து

தமிழர்களின் கை வண்ணத்தை பறைசாற்றும் பாரம்பரிய பொருட்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள தஞ்சாவூர் வீணை, நாச்சியார்கோவில் விளக்கு மற்றும் பத்தமடை பாய்க்கு புவிசார் அந்தஸ்து வழங்க மும்பையில் உள்ள அறிவுசார் சொத்து உரிமை அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன்வாயிலாக இந்திய சந்தை உள்பட உலக சந்தையில் இந்த பொருட்களின் போலிகள் விற்பனை தடுக்கப்படும்.

‘திருநெல்வேலி அல்வாடா, திருச்சி மலைக் கோட்டைடா’ என்ற பாடலுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியும் ஏதேனும் ஒன்றுக்கு புகழ்பெற்றதாகும். குறிப்பிட்ட பகுதியில் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமைப்பு இந்த அந்தஸ்தை வழங்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை 172 பொருட்களுக்கு புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அந்தஸ்து வழங்கப்படுவதன் வாயிலாக  இந்திய சந்தையில் மட்டும் அல்லாது சர்வதேச சந்தையிலும் போலிகள் புழக்கம் தடுக்கப்படும். இந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். கோவை கோரா காட்டன் புடவைகள், சிறுமலை ஹில் வாழைப்பழம் மற்றும் சுவாமி மலை செம்பு சிலைகள் உள்பட தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது இனிப்பான எச்சரிக்கை!

இந்த வரிசையில் தற்போது தஞ்சாவூர் வீணை, நாச்சியார்கோவில் விளக்கு மற்றும் பத்தமடை பாய்க்கு புவிசார் அந்தஸ்து வழங்க இந்திய அறிவுசார் அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இரண்டு வாரங்களில் இந்த ஒப்புதல் கிடைத்துவிடும் என இந்திய அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் வக்கீல் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் வீணை 17ம் நூற்றாண்டு முதல் தஞ்சாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மற்ற வீணைகளைப் போல் அல்லாமல் நன்கு வளர்ந்த பலா மரத்திலிருந்து இது உருவாக்கப்படுகிறது.
பத்தமடை பாயின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இங்கிலாந்து ராணியாக எலிசபெத் முடிசூட்டிக் கொண்ட போது அவருக்கு இங்கிருந்து பத்தமடை பாய் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் மிகைல் கார்பசேவ் இந்தியா வந்த போது அவருக்கு பத்தமடை பாய் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாச்சியார்கோவில் பகுதியில் கடந்த 1857ம் ஆண்டு முதல் பித்தளை மற்றும் வெண்கல அயிட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் நாச்சியார்கோவில்  விளக்கு மிகவும் புகழ்பெற்றதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக